ஈரோடு செப் 10:
கீழ்பவானி பாசனத்தின் தந்தை ஈஸ்வரனுக்கு சிலை வைக்கப்படும் என்ற தமிழக அரசுக்கு கீழ்பவானி விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணை கட்ட நடவடிக்கை எடுத்த ஈரோடு முன்னாள் எம்எல்ஏ தியாகி ஈஸ்வரனை கவுரவிக்கும் வகையில், அணைப்பூங்கா பகுதியில் அவரது சிலை அமைக்க வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பல முறை அரசிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறியதாவது,வானம் பார்த்த பூமிகளாக கிடந்த நிலத்தை பாசன நிலங்களாக மாற்றிய பெருமை தியாகி ஈஸ்வரனை சாரும்.
எனவே தான் கீழ்பவானி பாசனத்தின் தந்தை என்று விவசாயிகளால் அழைக்கப்பட்டு வருகின்றார். அவரை கவுரவிக்கும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றோம். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. தற்போதுள்ள மக்கள் நலன் சார்ந்த விடியல் அரசாக செயல்பட்டு வரும் தமிழக அரசு தியாகி ஈஸ்வரனுக்கு சிலை வைக்கவும், அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதற்காக தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கும் பாசன விவசாயிகள் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு கூறினார்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/