ஈரோடு செப் 2:

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை கறவை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி மட்டும் மின்றி நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். வாரம் தோறும் 600 முதல் 700 மாடுகள் வரத்து ஆகும். பசுமாடுகள் ரூ.30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ 15,000 வரையும் விற்பனை ஆகும். அதேபோல், இங்கு வரத்தாகும் மாடுகளை கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர்.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல், 15ம் தேதிக்கு இந்த சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையினை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இன்று முதல் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதன்பேரில் நான்கரை மாதங்களுக்கு பிறகு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் இன்று நடைபெற்ற சந்தைக்கு வரவில்லை. இதனால், மாடுகள் விற்பனையும் மந்தமாகவே நடந்தது. கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தியமங்கலம், தாளாவடி, கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளில் இருந்தும், நாமக்கல், கரூர் போன்ற சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது, சந்தையின் நுழைவு வாயிலில் மாட்டு சந்தை பணியாளர்கள் வாகனங்களின் டயர்களுக்கும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்தனர். அதேபோல், வியாபாரிகள், வாகன டிரைவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அதேபோல், மாட்டு சந்தையில் ஆங்காங்கே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பேனர்களும், 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வாசங்களும் தொடர்ந்து ஒலிக்க செய்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/