ஈரோடு டிச 28:

ஈரோடு மாவட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்கள் 40 பேருக்கு பட்டயக்கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் (பட்டமளிப்பு) வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கி, தேர்ச்சி பெற்ற 40 இடு பொருள் விற்பனையாளர்களுக்கு பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கினார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவருமான முனைவர் அழகேசன் முன்னிலை வகித்து, சான்றிதழ் பெற்றவர்கள் வரும் காலங்களில் வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் இணைந்து புதிய விவசாய தொழில்நுட்பங்களை விவசாயிகள் மத்தியில் எடுத்து சென்று பரவலாக்கம் செய்ய வேண்டும், என பேசினார்.

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கலந்து கொண்டு, வேளாண் தொழில் நுட்ப பரவலாக்கத்தில் இடுபொருள் விற்பனையாளர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்தும், நபார்டு வங்கி ஈரோடு மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் பங்கேற்று, விஞ்ஞானரீதியில் தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பேசினர். நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள், அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today