ஈரோடு ஆக 11:

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெல்ல அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மேல் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் அல்லது இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஈரோடு ரயில்நிலையத்திற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 100 ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் கேரளாவில் இருந்து மட்டும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் ஈரோடு வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகம் சார்பில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு நுழைவாயில் பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் காய்ச்சல் இருப்பது உறுதியானால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் கூறினர். முதல்நாளான நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சில பயணிகள் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்ததையடுத்து கொரோனா பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today