ஈரோடு நவ 9:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக சென்னையில் ஒரு நாள் இரவு பெய்த கனமழையால் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக  மாறியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதியான சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கோபி, தாளவாடி மலைப்பகுதி, வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் போன்ற அணை பகுதிகளிலும் மிகக் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணை, குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வருகின்றன.  பவானிசாகர் அணையும் 104 அடியை நெருங்கி உள்ளது.

இதனால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக மழை பெய்தால் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும், 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவில் இணை கமிஷனர், சுகாதார துணை ஆய்வாளர், 10 பணியாளர்கள் ஒரு ஜே.சி.பி. எந்திரம் என 4 மண்டலங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகரை பொருத்தவரை காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை பெய்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் பெரும்பள்ளம் ஓடை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லவும் அருகிலுள்ள பள்ளிகளில் அவர்களை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாநகர் பகுதியில் மழை காலத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மழை பெரிய அளவில்  பெய்தாலும் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். https://www.tnurbantree.tn.gov.in