ஈரோடு அக்.18:
ஈரோடு மாநகரில் கடந்த 14ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து வாழைக்கன்று, வாழை இலை, மா இலை, பழங்கள், பொரி உள்ளிட்டவற்றை படைத்து வழிபாடு நடத்தினர். மேலும், ஆயுத பூஜையையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் வாழைக்கன்றுகளை வியாபாரிகள் சாலையோரம் விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். பண்டிகை முடிந்ததும் விற்பனையாகாத வாழைக்கன்றுகளை சாலையோரமே அப்படியே வீசி சென்றனர்.
இதனால், மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள், கடைகளின் கழிவுகளை காட்டிலும், வியாபாரிகள் விட்டு சென்று வாழைக்கன்று, பூசணிக்காய் போன்ற கழிவுகளே அதிகமாககாணப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை முதலே மாநகரில் சேகரமான ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் 4 மண்டலங்களிலும் தினசரி சராசரியாக 200 டன் அளவுக்கு குப்பை கழிவுகள் சேகரமாகும். ஆயுதபூஜை பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் கூடுதலாக சேகராமாகியுள்ளது. இதில், முக்கிய வீதிகளில் கடை அமைத்திருந்த வாழைக்கன்று வியாபாரிகள் விற்பனையாகத வாழைக்கன்றுகள், பூசணிக்காய்களை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
இதனை அகற்றும் பணியில் நேற்று முதல் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 100டன் அளவுக்கு குப்பை, வாழை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த பணிகள் நாளை வரை நடக்கும். மேலும், சாலையோரம் திருஷ்டிக்காக உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகரில் ஆயுதபூஜை கழிவுகள் மட்டுமே 200 டன் வரை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். https://www.enviroment.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/