ஈரோடு டிச 2:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் இளைஞர்கள் முதியவர்கள் பெண்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது. இதில் முன் களப்பணியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் இறந்தனர். இந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள், போலீசார், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர். முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து முக கவசம் அணியும் பழக்கம் அதிகரித்தது. இந்நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தாக்கம் நமது மாவட்டத்தில் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 70 என்ற அளவில் இருந்து வருகிறது. தற்போது பெரும்பாலும் பொது மக்கள் வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருவது இல்லை. சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணியாமல் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி தற்போது ஒமிக்கரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் அதிக வீரியம் கொண்டதும், விரைவாக பரவும் தன்மை கொண்டது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மாநில சுகாதார துறை அதிகாரிகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கும்  பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் முக கவசம்  அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டலங்களிலும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 93 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.இதன் மூலம் ரூ 18 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே உங்க கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். https://www.tnpolice.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/