ஈரோடு சூலை 29:

காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. முதல் போக நன்செய் பாசனத்துக்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி வரை 120 நாட்களுக்கு 5 ஆயிரத்து 184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் தற்போது 100 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் காலிங்கராயன் வாய்காலில் 120 நாட்களுக்கு எந்தவித தடையுமின்றி தண்ணீர் திறக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது நிலத்தை நெல் நடவுக்கு தயார் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் காலிங்கராயன் பாசன பகுதியில் தற்போது நெல் விதைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்து, நெல்லை விதைத்து வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் நெல் நாற்றுகள் தயாராகிவிடும். அதன் பின்னர் நாற்று பிடுங்கப்பட்டு வயல்களில் நடப்பட உள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today