ஈரோடு நவ 22:
பாரம்பரிய நெல் விதைகள் 125 டன் சாகுபடி செய்யப்பட்டு வருவதையடுத்து அடுத்தாண்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் குருப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் அரசு விதைப்பண்ணை இயங்கி வருகிறது. இந்த விதைப்பண்ணையில் கடந்த மாதம் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி நடவு செய்யப்பட்டது.
பயிர் வளர்ச்சிகள் குறித்துவிதைப்பண்ணையை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாரம்பரிய மருத்துவ குணங்கள் உடைய ரங்களான தூயமல்லி 4 ஏக்கரிலும், அருபதாம் குறுவை 3 ஏக்கரிலும் நடவு செய்யப்பட்டு தற்பொழுது தூர் பிடிக்கும் நிலையில் உள்ளது. செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்டுள்ளதால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வருகின்றது.
அரசு விதைச்சான்று துறை மூலம் முளைப்புதிறன், கலவன், பயிர் விலகு தூரம், பிற ரக கலப்பு மற்றும் புறத்தூய்மை போன்ற காரணிகள் பரிந்துரைக்கப்பட்ட கணக்கீட்டின்படி உள்ளதா என்று வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 125 டன் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தாண்டு குறுவை, சம்பா பருவத்திற்கு இம்மாவட்டத்தின் விவசாயிகளின் விதை தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். https://www.tnagrisnetn.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/