ஈரோடு ஆக. 1:
மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,800 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர்.பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு நாள் பாதிப்பு என்பது 122ஆக குறைந்தது. இந்நிலையில், கடந்த 6 நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்துறை, மருத்துவத்துறை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபாரதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today