ஈரோடு செப் 16:

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்தது. ஆனால், வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் விற்பனை மந்தமாக நடந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி, நாமக்கல், கருர் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரத்தாகும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று கூடிய சந்தையில் கடந்த 2 வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. அதன்படி, பசு- 300, எருமை- 100, கன்று- 50 என மொத்தம் 450 மாடுகள் வரத்தானது. இதில், பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனையானது.

மாடுகளை மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து வாங்கி சென்றனர். கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் இன்று கூடிய சந்தையில் விற்பனை மந்தமாக நடந்ததாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/