ஈரோடு அக் 29:

வடகிழக்கு பருவமழையையொட்டி விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி, இயற்கை இடர்பாடுகளான புயல், மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இருந்து தோட்டக்கலை பயிர்களை முறையாக பாதுகாத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில், அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரங்களின் சுமையை குறைக்கவேண்டும்.

காற்றினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மரங்களைகவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்திட வேண்டும். மழை நீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு அல்லது விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேக்கத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து செடிகள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

மழை நீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்கவேண்டும். மேலும், இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம். தோட்டங்களில் பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் அமைத்திருப்பின் அதன் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக்கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/