ஈரோடு நவ 15:
சின்ன வெங்காய பயிரில் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற விதைக்குமிழ்களை தரமானவையாக தேர்வு செய்து பயிரிட தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2,292 எக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை குமிழ்கள் (விதைக்காய்கள்) மூலமே சின்ன வெங்காயம் பயிர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் விவசாயிகள் வெங்காயத்தை சாகுபடி நிலத்தை தயார் செய்து வருகின்றனர்.சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்யும்போது, விதை குமிழ்கள் திரட்சியான நோய் தாக்கமில்லாத அழுகலற்ற விதை வெங்காயமாக இருக்க வேண்டும்.
வெங்காய விதை குமிழ்களை டிரைகோடெர்மா 10 கிராம் மற்றும் பேசில்லஸ் 10 கிராம் என்ற அளவுள்ள கரைசலில் நனைத்து நட வேண்டும். அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி டெபுகோனசால் 25.9சதவீதம் அளவுள்ள கரைசலில் வெங்காய குமிழ்களை நனைத்து நட வேண்டும். வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். தகுந்த இடைவெளியில் வெங்காயம் நடவு செய்யப்பட வேண்டும்.
தண்ணீர் மற்றும் உரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வெங்காய செடி முளைத்தவுடன், செடியின் வேர்ப் பகுதியினை சுற்றிலும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசல் கொண்டு நனைக்கவேண்டும். நடவு செய்யப்பட்ட 30ம் நாளில் 2.5 கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை நன்கு மக்கிய 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும். வெங்காய பயிரின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் நோய் பாதித்த செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து துவண்டு காய்ந்து காணப்படும்.
நோய் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைச் சுற்றிலும் 0.1 சதம் 0.25 சதவீதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு (அல்லது) 0.1 காப்பர் ஹைட்ராக்சைடு சதம் கரைசலை மண்ணில் ஊற்ற வேண்டும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஏற்படும் பேக்டீரியல் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டெப்டோ சைக்கிளின் (0.2 கிராம்/லி) மருந்துடன் காப்பர் ஆக்சி குளோரைடு (2.5 கிராம்/லி) அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு (1 கிராம்/லி) மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். கோழிக்கால் நோய் மற்றும் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்த தேவையின் அடிப்படையில் மட்டுமே டெபுகோனசால் 25.9சதவீத மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
மழை மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் அடி சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி ரிடோமில் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற அளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 தடவை தெளிக்க வேண்டும். மேலும், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி டீபால் போன்ற ஒட்டும் திரவம் கலந்து தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம். இந்த முறைகளை கடைபிடித்து சின்ன வெங்காய சாகுபடியில் அதிக மகசூலை பெறலாம். இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in,
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/