ஈரோடு அக்.21:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் இல்லம் தேடிக்கல்வி திட்டம் குறித்த மாவட்ட அளவிலான குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கொரோனா பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளிகளை குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்தல், பள்ளி நேரத்தை தவிர, மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்குதல், மாணவர்கள் பள்ளி சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை ‘இல்லம் தேடிக் கல்வி” திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இத்திட்டமானது ஒரு அரசு திட்டமாக மட்டுமல்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பலதுறையை சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்து செல்லும் வகையில் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘இல்லம் தேடிக்கல்வி’ திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலை குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படுகிறது.தன்னார்வலர்கள் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியான 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதைப்போலவே 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிக்கவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்பு திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர், ஊரக பகுதி மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான சின்னம் மக்கள் பங்கேற்புடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சின்னம் உருவாக்கும் போட்டி வரும் 24ம் தேதிக்குள் நடத்தப்படவுள்ளது.

இதில் அனைத்து நகர், ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்தால் இறுதிசெய்யப்படும்.

சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியாளர்கள் தங்களின் இறுதி படைப்பினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். போட்டியாளர்களால் வழங்கப்படும் சின்னத்தை இறுதி செய்யும் பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையை சார்ந்ததாகும்.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் பேராசிரியர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இலக்குமிநரசிம்மன், ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர்(பயிற்சி) மான்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

**பாக்ஸ்**இல்லம் தேடி விழிப்புணர்வு கலைக்குழு வாகனம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியியை குறைக்கும் வகையில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மூலமாகவும் மற்றும் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இத்திட்டம் குறித்து ஈரோடு மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட அதிர்வு, செம்பருத்தி, தமிழாலயம் கலைக்குழுவினரின் 15 நாட்கள் விழிப்புணர்வு கலைப்பயணம் மேற்கொள்ளகின்றனர், என தெரிவித்தார். https://www.tnschools.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/