சத்தியமங்கலம் சூலை 11:

சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் வனப்பகுதி தொலைதூர மலை கிராமங்களில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு மொத்த சாகுபடி பரப்பில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டேர் அதிகரிக்கவும், நிகர சாகுபடி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தவும், இருபோக பயிர் சாகுபடியை 10 லட்சம் எக்டேரில் இருந்து இரு மடங்காக 20 லட்சம் எக்டேராக உயர்த்த திட்டமிட்டுள்ளது.இப்பணியை 10 ஆண்டில் நிறைவு செய்ய திட்டமிட்டு நடப்பாண்டு தமிழக உணவு உற்பத்தி இலக்கு 125 லட்சம் டன் என நிர்ணயித்துள்ளனர். சாகுபடி செய்துள்ள பயிர்களை விடுதல் இன்றி வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து வருவாய் துறை அலுவலர்களுடன் சமன் செய்ய வேண்டும். ஈரோடு வனப்பகுதியில் மலை கிராம பயிர்களை ஈரோடு மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். அவருடன் துணை இயக்குனர்கள் ஆசைதம்பி, சிவகுமார், வேளாண்மை உதவிகள் இயக்குனர் மாரியப்பன், மணிகண்டன் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர். கடம்பூர் மலை, பசுவனபுரம், இருட்டிபாளையம், கரளையம், குன்றி மலை, அணில் நத்தம், மாகாளிதொட்டி, மாக்கம்பாளையம், அரிகியம் என 10க்கும் மேற்பட்ட அடர் வனப்பகுதி கிராமத்தில் பயிராய்வு செய்தனர்.

இணை இயக்குனர் சின்னசாமி கூறியது, இம்மாவட்டத்தில் நடப்பாண்டில் உணவு உற்பத்தி இலக்கு 3.36 லட்சம் டன்னாகும். இதனை அடைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். சத்தியமங்கலம் வனப்பகுதி கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம் மலையில் கோடை மழை பெய்துள்ளதால் முதல் பயிராக பயறு வகைகளான உளுந்து, வரகு சாகுபடி செய்துள்ளனர். இதனை அறுவடை செய்துவிட்டு மானாவாரி ராகி, மக்காசோளம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்வார்கள். சாகுபடி செய்துள்ள பயிர் விவரங்களை கணக்கில் கொண்டு வருவதற்கு, வேளாண் களப்பணியாளர்களுக்கு உரிய யோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். குன்றி மலையில் பெரிய குன்றி கிராமத்தில் ராஜப்பன் என்பவரின் வரகு, உளுந்து வயல்கள், அரிகியம் கிராமத்தில் முருகன் வயலில் நுண்ணீர் பாசன கருவி ஆய்வு செய்யப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today