ஈரோடு அக் 28:

ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஜிப்சம் உரத்தினை பரிந்துரையின்படி பயன்படுத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் சரவணக்குமார் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் எண்ணெய் வித்துப்பயிர்களில் மிகவும் பிரதானமான பயிராக நிலக்கடலை உள்ளது. இப்பயிரானது பொதுவாக இறவை மற்றும் மானாவாரியில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 70 சதவீதம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுவதால், அதன் உற்பத்தி திறனை அதிகரிப்பது முக்கியமானது.

பெரும்பாலான நிலக்கடலை சாகுபடி பேரூட்ட சத்துக்களான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை தொடர்ந்து மண்ணில் இடுவதால் கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்து, நுண் சத்துக்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக எண்ணெய் சத்துக்களின் அளவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

பயிரில் கந்தகசத்தின் பற்றாக்குறை ஏற்பட்டால் பயிரின் இளம் இலைகள் வெளிரி காணப்படுவதுடன், இலைகள் காகிதம் போல் வெண்மையாக மாறி விடும். பற்றாக்குறைகள் அதிகமாகும் போது செடி முழுவதும் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாகி விடும். சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் பயிரின் அடிப்பகுதியில் சிறு குழிகள் போன்று உருவாகி, பின்னர் கருகிய திட்டுகளாக மாறி காய்ந்து விடும்.

இலைகளின் நுனி மற்றும் ஓரங்கள் கிழிந்து காணப்படும். தண்டின் அடிப்பகுதியில் வெடிப்புகள் ஏற்படும். பூக்களில் சூல்பை சிதைவு ஏற்பட்டு பாப்ஸ் எனப்படும் பொக்குகடலை உருவாகும். இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க மானாவாரி நிலக்கடலை பயிருக்கு போதிய சத்தினை அளிக்க ஜிப்சம் உரத்தினை பிதித்து இடுவது சிறந்த பலனளிக்கும்.

ஒரு எக்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட 400 கிலோ ஜிப்சத்தினை இரண்டாக பிரித்து 200 கிலோவை அடி உரமாகவும், மீதமுள்ள 200 கிலோவை பயிர் பூக்கும் தருணத்திலும் இட வேண்டும். போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும் பொழுது ஜிப்சத்தை இட்டு மண் அணைத்தால் சிறந்த பலனளிக்கும்.

இவை விழுதுகள் மண்ணில் இறங்குவதற்கும், திரட்சியான பருப்புகள் உருவாவதற்கும் உதவுகின்றன. ஜிப்சம் இடுவதால் மண்ணில் கால்சியம் சத்து அதிகரிக்கிறது. இதன் மூலம் மண்ணின் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதுடன், மண்ணின் கடினத்தன்மை குறைக்கவும் உதவுகிறது.

இதனால் விதைகள் எளிதில் முளைத்து வர வழிவகை செய்யும். எனவே, மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்ற உரங்களை போல ஜிப்சம் உரத்தை தூவாமல் பயிருக்கு அருகாமையில் மண்ணில் இட்டு, அதிக மகசூலை பெறலாம்.இவ்வாறு சரவணக்குமார் தெரிவித்துள்ளார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/