ஈரோடு அக் 3:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இடி மின்னல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகரை பொருத்தவரை நேற்று 3.40 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவு வரை மழை விட்டு விட்டு பெய்து. இதனால் மாநகரில் தாழ்வான பகுதியில் மீண்டும் மழை நீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் இப்பகுதியில் உள்ள ரோடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். பலத்த இடி காரணமாக ஒரு சில வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுது ஆயின. மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 கிலோ மீட்டர் மழை பதிவாகி இருந்தது.இதைப்போல் பவானிசாகர், கோபி, குண்டேரிப்பள்ளம், ஈரோடு, கொடிவேரி, நம்பியூர், கொடுமுடி, பவானி, பெருந்துறை, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், கவுந்தபாடி, மொடக்குறிச்சி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-சத்தியமங்கலம் 53, பவானிசாகர் 38.6, எலந்தகுட்டைமேடு 38.2, கோபி- 35.2, குண்டேரிபள்ளம்- 34.2, ஈரோடு 34, கொடிவேரி 31.2, நம்பியூர் 29, கொடுமுடி 27.4, பவானி 27, பெருந்துறை 17, அம்மாபேட்டை 16, வரட்டுப்பள்ளம் 16, கவுந்தப்பாடி -12, மொடக்குறிச்சி 11, சென்னிமலை 4 மி.மீட்டர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/