ஈரோடு சூலை 20:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், கொடிவேரி அணை, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக மாறி உள்ளது. மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. தாளவாடி, பவானிசாகர், ஆசனூர், சத்தியமங்கலம் பகுதியில் நேற்று தொடர் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ராமரணை அருகே மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் சொல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதேபோல் நேற்று மொடக்குறிச்சி, கொடிவேரி, கவுந்தப்பாடி, கொடுமுடி, குண்டேரிபள்ளம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-பவானிசாகர் 11, தாளவாடி- 10, சத்தியமங்கலம் 6, மொடக்குறிச்சி 5, கொடிவேரி- 5, கவுந்தப்பாடி 2.6, கொடுமுடி 2, குண்டேரிபள்ளம் 1.8 மி.மீட்டர் பதிவானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today