அந்தியூர் சூலை 2: அந்தியூரில், ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ‘காக்கும் கரங்கள்’ என்ற அமைப்பின் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட எஸ்.பி., சசிமோகன் கலந்து கொண்டு பேசினார்.

குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறுவர், சிறுமிகளை பணியில் அமர்த்துவது மற்றும் பெண்கள் தொடர்பான அனைத்து விதமான புகார்களையும் 1098 என்ற உதவி எண்ணை அழைத்து உதவி கோரலாம். இதுகுறித்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 270 வாகனங்கள் மது மற்றும் சாராயம் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சுபவர்கள், சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி., சசிமோகன் எச்சரிக்கை விடுத்தார். ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, பவானி டி.எஸ்.பி., கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே