ஈரோடு டிச 9:

ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு வழங்கியதை குறைக்க வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மனு வழங்கினர். இச்சங்கத்தினர் தலைவர் சுரேஷ், செய்தி தொடர்பாளர் கந்தவேல் ஆகியோர் மனுவில் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும் வேலைவாய்ப்பை கொண்டிருக்கும் ஜவுளி தொழிலே மிகப் பிரதானமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கக்கூடிய தொழிலாகவும் உள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பெரும் தொற்றுக்கான பொது முடக்கம் காரணமாகவும், கடந்த பல மாதங்களாக கடுமையான நூல் விலை உயர்வு காரணமாகவும் ஜவுளித் தொழில் 50 சதவீதம் குறைந்துள்ளது.

ஜவுளித் தொழிலைச் செய்து வந்த சிறு குறு மற்றும் நடுத்தர விசைத்தறியாளர்கள் தொழிலை விட்டே சென்றுவிட்டனர். மேலும் தற்பொழுது உள்ள 5 சதவீத வரியை 12 சதவீதமாக மாற்றியமைக்கும் பொழுது மேலும் ஜவுளித் தொழில் மிகவும் நலிவடைந்துவிடும். இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர விசைத்தறியாளர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

இதன் மூலம் இதனைச் சார்ந்துள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துவிடுவார்கள். இந்த வரி விதிப்பானது பொது மக்களை நேரடியாக பாதிக்கும், அவர்களின் வாங்கும் திறன் குறைந்துவிடும். ஆகவே தற்பொழுது நடைமுறையில் உள்ளது போலவே ஜவுளித் தொழிலுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியையே நீட்டித்து தர தாங்கள், ஜவுளித்துறை அமைச்சருக்கு எடுத்துரைத்து ஆவண செய்யுமாறு, கேட்டு கொண்டுள்ளோம். https://www.gst.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/