ஈரோடு டிச 11:

காட்டன் ரக ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி, 5 இருந்து 12 சதவீதமாக உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை சார்ந்த 4 ஆயிரம் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளித் தொழிலின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்வு காரணமாக இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

எனவே நூல் விலையை மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி செயற்கை நூல்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்தும், காட்டன் உள்ளிட்ட இயற்கை நூல்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதால் ஜிஎஸ்டியை திரும்ப பெறுமாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் ஒன்றிய அரசு ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி இன்று (10ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறிகள், டையிங், பிராசசிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மற்றும் ஜவுளி விற்பனை சார்ந்த கடைகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை என ரூ.75 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு தீர்வு காண்பதற்குள் அடுத்த பெரும் பாதிப்பாக ஜி.எஸ்.டி. உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டன் ரகங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

இந்த வரி உயர்வானது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களையும் கடுமையாக பாதிக்க செய்யும். ஜி.எஸ்.டி. உயர்வால் ஜவுளியின் விலையும் உயரும். கூடுதல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.  எனவே வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கின்றது. இதன்படி ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தி, விற்பனை சார்ந்த நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு கூறினார். https://www.texmin.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today