ஈரோடு ஆக 21:

ஈரோடு மாவட்டத்தில் 1,327 அரசு பள்ளிகளில் தோட்டங்கள் அமைத்து சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தி குறித்த அனுபவ அறிவை ஏற்படுத்தும் வகையிலும், நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தியை வலியுறுத்தும் வகையிலும் பள்ளிகளில் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக சத்துணவு மையங்களில் உள்ள பள்ளிகளில், கட்டாயம் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. காய்கறி தோட்டம் அமைக்க ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகின்றது. விதைகள் வாங்குதல், தளவாட பொருட்கள் வாங்குதல் மற்றும் முள்வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதியை செலவிட்டுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,327 அரசு பள்ளில் நஞ்சில்லா காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு கீரை வகைகளான செங்கீரை, மிளகு தக்காளி, கரிசல், பசலை, சிறுகீரை, புளித்த கீரை உள்ளிட்டவைகளும், காய்கறிகளில் பீர்க்கன், அவரை, தக்காளி, மிளகாய், முள்ளங்கி, சேனை மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சத்துணவு திட்ட மாவட்ட அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது,ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,312 அரசு பள்ளிகள் மற்றும் 15 குழந்தை தொழிலாளர் பள்ளிகள் என மொத்தம் 1,327 பள்ளிகளில் நஞ்சில்லா காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சத்தான காய்கறிகள் தேவையான அளவு உணவில் வழங்க முடியும்.

மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 735 மாணவர்களும், நகர்புறங்களில் 5 ஆயிரத்து 135 மாணவர்கள், குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் 301 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 171 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் மாணவர்களுக்கு தேவையான உலர் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் திறக்கப்பட்டதும் காய்கறிகள் முழுமையாக சத்துணவுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு மணிவண்ணன் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today