ஈரோடு ஆக 20:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி பிரியா தேவி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல் துறை, சைல்டு லைன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து காக்கும் கரங்கள் என்ற அமைப்பு தொடங்கி, பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் பயனாக மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் (ஜூலை) வரை 10 குழந்தைகள் திருமணம் செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, துன்புறுத்தல் செய்ததாக 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்த்தில் 4 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 167 பேரின் விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் நிவாரண நிதி பெறுவதற்கும் அதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவான் அலுவலகத்தில் 2ம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம். அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today