ஈரோடு ஆக 17:

ஈரோட்டில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமை தாங்கினார். வருவாய் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் குரு ராகவேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை கால முறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நிக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், ஈரோடு, கோபி, சத்தி, நம்பியூர், பவானி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today