ஈரோடு நவ 16:

ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி 3.1 லட்சம் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து நெற்பயிர் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஈரோட்டை அடுத்த பெரியசடையம்பாளையம் கிராமத்தில் செம்மை நெல் சாகுபடி முறையை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக 63800 எக்டேரும், உணவு தானிய உற்பத்தி இலக்காக 3.1 லட்சம் மெட்ரிக் டன்னும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை கூடுதல் மகசூல் தரும் என்பது நிரூபணம் செய்யப்பட்ட தொழில்நுட்மாகும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் மட்டுமே பயன்படுத்தி 1 சென்ட் நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்து.

குறைந்த வயதுடைய 15 நாள் ஆன செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடைவெளி விட்டு நடுவதால் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. மேலும் கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர்கள் அசோக், சிவக்குமார், உதவி இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/