ஈரோடு செப் 14:
ஈரோட்டில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 18 கிலோ பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. திருவண்ணாம மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அசைவ ஓட்டலில் கடந்த 8ம் தேதி தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்ட 10 வயது சிறுமி உடல் நலம் பாதித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே ஓட்டலில் உணவு வகைகளை சாப்பிட்ட 24 பேர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் காலாவதியான உணவு பொருட்களையும், ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளையும் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதன்பேரில், தமிழகத்தில் உணவு பாதுகாப்பு பாதுகாப்பு துறையினர் பல்வேறு ஓட்டல்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், ஈரோடு மாநகரில் காந்திஜி ரோட்டில் உள்ள தனியார் அசைவ ஓட்டலில் (ஆர்.ஆர்.பிரியாணி) நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, ஓட்டலில் காலாவதியான உணவு பொருட்கள், கோழி இறைச்சகிளை ஏற்கனவே சமைத்து பதப்படுத்தி பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாப்பிட மற்றும் விற்பனைக்கு தகுதியற்ற 8 கிலோ இறைச்சி, 8 பாக்கெட் காளான், 10 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் கூறியதாவது: ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினோம். இதில், ஓட்டல்களில் ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பதப்பபடுத்தப்பட்ட உணவு வகைகளை இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழித்து, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குகிறோம். 2வது முறை இதை தவறை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
ஓட்டல்களில் மக்களை கவர்வதற்கான பல்வேறு வர்ணங்களில் சிக்கன் சில்லி, தந்தூரி வகைகளை விற்பனை செய்கின்றனர்.அதுபோன்ற நிறமிகள் பயன்படுத்திய உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கானது. பதப்படுத்தும் உணவு வகைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தினசரி கோழி, ஆடு இறைச்சிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும், எத்தனை கிலோ வாங்கியுள்ளீர்கள், எப்போது வாங்கீனிர்கள் என்பதற்கான பில்லினையும் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள அசைவ ஓட்டல்கள், சாலையோர கடைகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தடை செய்யப்பட்ட நிறமிகள், காலாவதியான உணவு பொருட்கள், பதப்படுத்தின உணவு பொருட்கள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/