ஈரோடு ஆக 3: ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 130 என்ற நிலையில் இருந்து 180 வரை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை எடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் மீண்டும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 300 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றும் ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சலில் மட்டுமே உணவு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பொருத்தவரை காந்திஜி ரோடு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, சின்ன மார்க்கெட் பகுதி, சூரம்பட்டி வலசு, சூளை உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் இரண்டு வேளையும் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் மற்றும் மற்ற உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அம்மா உணவகத்திலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் மீண்டும் தொற்று  அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் அம்மா உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பார்சலில் மட்டும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today