ஈரோடு நவ 8:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக காய்கறி விலையும் அதிகரித்து வருகிறது. இதைப்போல் இறைச்சிகள் வரத்தும் குறைந்து உள்ளதால் இறைச்சிகள் விலையும் அதிகரித்துள்ளது.

பொதுவாக வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள், மீன் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் மற்ற நாட்களை விட கூடுதலாக இறைச்சிகள், மீன்கள் விற்பனை நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் வார இறுதி நாளான இன்று மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் வகைகள் அதிகளவில் விற்கப்படுவதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் மழை எதிரொலியாக கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்த அளவே வரத்து இருந்தன. கடந்த வாரம் 2,500 கிலோ மீன்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்த வாரம் வெறும் 1,000 கிலோ மீன்கள் மட்டுமே வழக்காக இருந்தது. இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

வஞ்சிரம் மீன் ஒரு கிலோ கடந்த வாரம் ரூ.750-க்கு விற்றது. இந்த வாரம் ரூ.900-க்கு விற்பனையானது. இதேபோல் இறால் கடந்த வாரம் ரூ.500, இந்த வாரம் ரூ.600, நண்டு கடந்த வாரம் ரூ.350, இந்த வாரம் ரூ.500 விற்பனையானது. இதேபோல் சீரா ரூ.450, கடல் பாறை ரூ.450, விலா மீன் ரூ.450, சங்கரா- ரூ.350, மத்தி ரூ.200, அயிலை ரூ.275, ரோகு, கட்லா தலா ரூ. 170 விற்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீனின் விலை அதிகமாக இருந்தது. இதைப்போல் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் நீர் மார்க்கெட்டில் மீன் விலை அதிகரித்து இருந்தது. https://www.fisheries.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/