ஈரோடு டிச 22:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ஜவுளி சந்தை வியாபாரம் முடங்கியது. தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை, ஜவுளி ரகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதுபோன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக ஜவுளி சந்தையில் மந்தமாகவே வியாபாரம் நடந்தது.

குறிப்பாக மொத்த வியாபாரம் வெளிமாநில வியாபாரிகள் இன்றி வெறும் 20 முதல் 25 சதவீதம் அளவு மட்டுமே வியாபாரம் நடந்தது. இதைப் போன்று சில்லரை விற்பனையும் மந்தமாகவே நடந்தது.இந்நிலையில் வரும் வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையில் தொடர்ந்து வருவதால் ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்று இன்று  கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மொத்த துணிகளைக் கொள்முதல் செய்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சூடு பிடித்தது.

இதைப்போல் சில்லரை வியாபாரமும் சூடு பிடித்தது.இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது, கடந்த சில வாரமாக பல்வேறு காரணங்களால் ஜவுளி சந்தை மந்தமாகவே நடந்து வந்தது. குறிப்பாக மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடந்தது.

ஆனால் வரும் வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் பண்டிகைகளில் தொடர்ந்து வர உள்ளதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்தோம் அதை போன்று இன்று கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் உள் மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இன்று ஆந்திரா, கேரளாவில் இருந்தும், தமிழ்நாட்டில் திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடந்தது. இதைப்போல் சில்லரை வியாபாரமும் 40 சதவீதம் நடந்தது. இனி வரும் வாரங்களில் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். https://www.wholesaletextile.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today