ஈரோடு சூலை 17:

மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஈரோடு பெரும்பள்ளம் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோட்டை சுற்றிலும் பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகியவை உள்ளது. இதே போல கோபியில் கீரிப்பள்ளம் ஓடை, மொடக்குறிச்சி அருகே குரங்கன் ஓடை ஆகியவை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஓடைகளாக உள்ளது. இந்த ஓடைகள் வழியாக கழிவு நீர் மற்றும் மழைக்காலங்களில் மழை நீர் செல்கின்றது. ஓடைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் பெருக்கெடுத்து வரும் போது, ஓடைகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஓடைகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது,ஈரோட்டை சுற்றி ஓடும் ஓடைகளில் தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீர் செல்வதோடு திடக்கழிவுகளும் டன் கணக்கில் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. ஓடைகளில் முட்செடிகள் படர்ந்து கிடப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போது தண்ணீர் ஓட்டம் தடைபட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர் சேதம் ஏற்படுகின்றது. மேலும் சூரம்பட்டி வலசு, செங்கோடம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துவிடுகின்றது. எனவே மழைக்காலத்திற்கு முன்பாக பெரும்பள்ளம் ஓடை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓடைகளிலும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today