அந்தியூர் நவ 30:

சமவெளி பகுதிகளை போல மலைப்பகுதிகளுக்கும் லாரி வாடகையை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மரவள்ளி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

இதில் அந்தியூர் தாலூகாவுக்கு உட்பட்ட பர்கூர் மலைக் கிராமத்தில் தானிய சாகுபடிக்கு அடுத்தபடியாக மரவள்ளி சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றது. சமீபகாலமாக மரவள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்து வரும் நிலையில், மலைக்கிராமங்களில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கினை ஆலைகளுக்கு கொண்டு செல்லும் போது, வாகன வாடகையை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆலை நிர்வாகங்கள் வற்புறுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் வட்டார நிர்வாகி கண்னையன் கூறியதாவது, அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் மரவள்ளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்கு ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. சமவெளிப்பகுதிகளில் லாரி வாடகையை சம்மந்தப்பட்ட ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் மலைக்கிராமங்களில் மட்டும் விவசாயிகள் லாரி வாடகையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆலை நிர்வாகங்கள் கூறிவிடுகின்றனர். ஏற்கனவே விலை சரிவால் பாதிப்பு உள்ள நிலையில், லாரி வாடகையையும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினார். https://www.tnagrisne.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/