ஈரோடு ஆக 3: ஈரோடு மாவட்டத்தில் புதியதாக 3 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உழவர் சந்தைகள் திட்டம் தி.மு.க., ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டவை ஆகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புதியதாக மாநிலம் முழுவதும் 140 இடங்களில் உழவர் சந்தைகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதியதாக உழவர் சந்தைகள் தேவைப்பட உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோட்டில் கொல்லம்பாளையம், அந்தியூர் மற்றும் சென்னிமலை ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தைகளின் தேவைகள் உள்ளது  தெரியவந்தது. இதையடுத்து 3 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கலாம் என்று ஈரோடு மாவட்ட அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இடவசதி, நுகர்வோர்கள் எண்ணிக்கை, விவசாயிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today