ஈரோடு சூலை 24:

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அதன் பின் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு விதிக்கப்பட்டு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், காணொலி காட்சி மூலம் மீண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கியது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, டி.ஆர்.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். மாவட்ட அளவில் உள்ள அனைத்து வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், அந்தந்த பகுதி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.100 நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகள் மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். பவானிசாகர் அணை நிரம்புவதால் ஆக., 1 முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்.

மலைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சீமாறு புல் சேகரிப்பதற்காக அடர்மலைப்பகுதிக்கு செல்கின்றனர். மூன்று முதல் நான்கு மாதங்கள் அவர்கள் அங்கேயே தங்கி இருந்து சீமாறு புல் சேகரிப்பதால் அங்கேயே அவர்கள் தங்க வசதி செய்து தர வேண்டும். மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை, ஆறு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் நடந்து வரும் மராமத்து பணியை விரைவாக நிறைவு செய்து, தண்ணீர் திறப்புக்கு தயார் செய்ய வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களை வருவாய் துறையினர் விரைவாக வழங்காமல் உள்ளனர். அவற்றை விரைவாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், வேளாண் கடன்களை வழங்க தாமதம் செய்கின்றனர். சில வங்கிகளில் மறுக்கின்றனர். தற்போது விவசாய பணிகள் துவங்கி உள்ளதால், விரைவாக கடன் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today