சென்னிமலை நவ 26:

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை தொடங்கி உள்ளது. சென்னிமலை அடுத்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயமானது 77 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பறவைகள் வந்து தங்கியிருந்து இன பெருக்கம் செய்து பின்னர் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு சென்று விடும். இந்நிலையில், இந்த ஆண்டு சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி உள்ளது. மழை பொழிவு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் உள்ளிட்ட காரணங்களால் சரணாலய ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

சீசன் தொடங்கி உள்ளதையடுத்து வெளிநாட்டு பறவைகளான பெலிகான், பொரி வல்லாறு, நாமத்தலை வாத்து, மீன் கொத்தி போன்ற பறவைகளும், உள்நாட்டு பறவைகளான நீர் காகங்கள், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், புள்ளி அழகு கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றது. பறவைகள் அனைத்தும் அதிகாலை 6 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் மாலை 6 மணியளவில் சரணாலய ஏரிக்கு வந்து விடுகிறது.

தற்போது சுமார் 110 வகையான பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே போல சரணாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் நீல்பொறி கருஞ்சி, பழுமுனை ஒன்சி, கரும்புகர் குருசி, கருமுனை ஒன்சி உள்ளிட்ட 8 வகையான பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளது. பட்டாம்பூச்சிகள் நுகர்வதற்காக 60க்கும் மேற்பட்ட வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் கூறினர்.  https://www.bnhsenvis.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/