ஈரோடு செப் 13:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் (58) என்பவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உறவினருடன் ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். மூன்று ஆண்டுக்கு முன்பு நான் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்தேன். இதில் முதுகு தண்டுவடப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அன்றில் இருந்து படுத்த படுக்கையாக உள்ளேன். எங்கள் குடும்பத்திற்கு பூர்விகமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எனக்கு இன்னும் ஒரு ஏக்கர் நிலம் பங்கு உள்ளது. அதை என் அண்ணன் தர மறுத்து வருகிறார்.தற்போது என் மனைவியும், மகளும் என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். நான் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என் தாய் தான் என்னைக் கவனித்து வருகிறார். எனக்கு உரிய பங்கை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே என்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் எனக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/