ஈரோடு டிச 8:

ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் சங்க தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது: முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு சரிவர உதவித்தொகை கிடைப்பதில்லை. ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு கடந்த 3 ஆண்டுகளாவும், 2 பேருக்கு 12 ஆண்டுகளாகவும் உதவித்தொகை கிடைக்கவில்லை.

எனவே அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் சங்கம் சார்பில், புனர்ஜென்மம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் தொடங்கவும், பள்ளிக்கூடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு அனைத்து அரசு அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் படைவீரர்கள் சார்பில் இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி வழங்க தயாராக உள்ளோம்.

எனவே நாங்கள் தொழில் தொடங்க மாவட்ட நிர்வாகம் 10 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கவேண்டும்.  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுவரி கிடையாது. ஆனால் தமிழகத்தில் வீட்டு வரி வசூல் செய்யபப்டுகிறது. எனவே தமிழகத்திலும் முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு தீபாவளி பேனசாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும். முன்னாள் படைவீரர் விதவையர் கட்டமைப்புக்கு ஆவின் பாலகம் மூலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் பண்ணை வைத்து நடத்த அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர். https://www.indianarmy.nic.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/