ஈரோடு செப் 8:

ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி வீதி வகுப்பறைகள் எனும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மலைக்கிராமங்களில் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியம் இல்லாததால் மாணவ, மாணவியர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டது.மேலும் தொடர்ந்து கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதால் குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டதையடுத்து மலைக்கிராமங்களில் தொண்டு நிறுவனம் மூலம் படித்த உள்ளூர் இளைஞர்களை கொண்டு வீதிகளில் மாலை நேரங்களில் பாடங்களை கற்பிக்கும் நடைமுறையானது நேற்று உலக எழுத்தறிவு தினத்தையொட்டி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுடர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நடராஜ் கூறியதாவது,ஏற்கனவே மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் பள்ளிகளை நாங்கள் மலைக்கிராமங்களில் நடத்தி வருகின்றோம். அந்த அனுபவத்தில் வீதி வகுப்பறைகள் எனும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். பள்ளி பாடங்களுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, சுகாதாரக் கல்வி, விளையாட்டு, இயற்கை வேளாண்மை குறித்து கற்றுக்கொடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி ஆகியவை மலைக்கிராமங்களில் சாத்தியம் இல்லை என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீதி வகுப்பறைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பர்கூர் மலையில் கொங்காடை, அக்னிபாவி ஆகிய கிராமங்களிலும், கடம்பூர் மலைப்பகுதியில் பெரியகுன்றி, அணில்நத்தம், இந்திராநகர், மாகாளிதொட்டி, உகினியம், நகலூர் மற்றும் ஆசனூர் மலைப் பகுதியான கெத்தேசால், கானகரை உள்ளிட்ட 10 பழங்குடியின கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/