ஈரோடு சூன் 28: ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்காக  ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3ம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் தேர்வு செய்து மத்திய அரசின் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் விருது வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களில் மத்திய அரசின் ஸ்மார் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஈரோடு உட்பட 11 மாநகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் நகரங்களுக்கு மத்திய அரசின் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில்  விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்குகளில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் நுண் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் ஈரோடு மாநகராட்சி சார்பில் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று முதலில் தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் மக்கும் குப்பைகளை கொண்டு பயோமைனிங் முறையில் மறுசுழற்சி செய்யப்பட்டு நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உரங்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பதிவெண் அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. எவ்வித ரசாயனமும் இல்லாத இந்த இயற்கை உரத்தை வாங்கி செல்லும் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நேரடியாக உபயோகிக்கின்றனர். அவ்வாறு உபயோகிக்கும் பொழுது நல்ல மகசூல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த பணிகள தொடர்பான திட்ட அறிக்கைகளை  ஈரோடு மாநகராட்சி மத்திய அரசின் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் சமர்பித்தது. இதனையடுத்து மத்திய அரசின் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் இணையவழி மூலம் விருது தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த குறைந்த செலவில் நுண் உரம் தயாரிப்பு திட்டம் தேசிய அளவில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பிரிவுகளின் கீழ் 3வது இடத்தையும் தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்று உள்ளதாக மத்திய அரசின் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே