ஈரோடு ஆக 31: ஜெயலலிதா பல்கலை கழக்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் மாநகர மாவட்ட அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக் கழகத்தை நீக்குவதற்கான சட்ட முன் வடிவு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் சட்டசபை வளாகத்தில் இருந்து வெளியே வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஜெயலலிதா சட்ட பல்கலைக்கழகத்தின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் முன்னாள் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பொருளாளர் முருகானந்தம், மாநகர பிரதிநிதி ஆஜம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.
https://www.erode.today/