ஈரோடு அக் 9:
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத பதவி, இறப்பு காரணமாக காலி பதவி, ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 7 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து 20 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 65 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 144 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சீட்டு முறை என்பதால் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து விட்டு வெளியே வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 5வது வார்டு கவுன்சிலர் பதவி, ஈரோடு ஒன்றியத்தில் 4வது வார்டு கவுன்சிலர், பெருந்துறை ஒன்றியம் 10வது வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளில் காலை முதலே வாக்காளர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் அணிந்து வந்த வாக்காளர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாக்குசாவடிக்கு செல்லும் முன்பாக சானிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்கப்பட்டனர். கைகளில் கிளவுஸ் அணிவிக்கப்பட்ட பின்னர் வாக்குசாவடிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. வாக்குசாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குசாவடிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் 16.05 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 27.90 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி 46.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை, 6:00 மணிக்கு 70.22 சதவீத ஓட்டுகள் பதிவானது. அனைத்து ஓட்டுப்பெட்டிகளும், அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. https://www.elections.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/