ஈரோடு சூலை 2: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்வேறு தொழிற்சாலை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வுக்குப்பின் பேசியது: பெருந்துறை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நிர்வாக எல்லையில், சிப்காட்டில் 151 தொழிற்சாலை, பவானி பகுதியில் 44 சாயத்தொழிற்சாலை, சென்னிமலையில் 24 சிறு சாய தொழிற்சாலை, சத்தியமங்கலத்தில் 12 பேப்பர் தொழிற்சாலைகள் உள்ளன. சிப்காட் வளாகத்தில் தோல், சாய, பிற தொழிற்சாலைகள் சார்பில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் தனித்தனியாக அமைத்துள்ளனர். சிப்காட்டில் சாய தொழிற்சாலைக்கு தினமும் 34.51 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

இதில் 88 முதல் 92 சதவீத நீர் மறுசுழற்சி மூலம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஜவுளி பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், அடர்சாய கழிவு நீர், அலசு நீர் என தனித்தனியாக பிரித்து பொது சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. நாம் சாயமிடுதல் உட்பட தொழிலுக்கு முக்கியத்துவம் தருவதுடன், சிறந்த சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

ஈரோடு வைராபாளையத்தில் குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் மறுசுழற்சி செய்து உரமாக தயாரிக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு பேசினார். மாசுகட்டுப்பாட்டு வாரிய மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே