ஈரோடு ஜூன் 16: ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட, கர்நாடகா எல்லை பகுதியை ஒட்டிய தாளவாடி, ஆசனூர், கடம்பூர், பர்கூர் போன்ற ஏராளமான மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன.கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் மாவோயிஸ்ட் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலின் பேரில், மாநில எல்லைகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலும், சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மலை கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதியில் மாவோயிஸ்ட், நக்சல் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டறிய மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் 10 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில், சிறப்பு போலீஸ் பிரிவுக்கான போலீஸ் உடற்தகுதித்தேர்வு இன்று ஈரோடு வ.உ.சி. மைதானத்தில்  நடந்தது. இதில், ஓட்டபந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டு, அதில் தகுதியானவர்களை அடுத்தக்கட்ட காமண்டோ பயிற்சிக்கு தேர்வு செய்தனர்.இதுகுறித்து ஈரோடு எஸ்.பி., சசி மோகன் கூறியதாவது:-ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்ட், நக்சல் போன்ற மர்மநபர்களை கண்காணிக்க நக்சல் தடுப்பு பிரிவு (என்.எப்.டி.,) செயல்பட்டு வந்தது.

இந்த பிரிவு தற்போது மாவட்ட சிறப்பு இலக்கு படை (எஸ்,டி.எப்.,) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மலைக்கிராமங்களுடன் தொடர்பில் இருக்க மாவட்ட காவல் துறை சார்பில் சிறப்பு போலீஸ் பிரிவு துவங்குவதற்காக, உடல் தகுதியுடன் உள்ளவர்களை தேர்வு செய்ய தகுதி தேர்வு நடந்தது. இதில் 10 பேரை தேர்வு செய்து மலைக்கிராமங்களில் மாவோயிஸ்ட், நக்சல் போன்ற மர்ம நபர்கள் நடமாட்டத்தையும், மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுடன் தொடர்பில் இருக்குமாறும் இந்த பிரிவு செயல்படும்.மேலும், மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் பொது கோரிக்கைகள், பிரச்சனைகள், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை மனு மூலம் பெற்று காவல் துறை மூலமாகவோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவோ தீர்வு காணப்படும்.    இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈ‍ரோடு டுடே