ஈரோடு டிச 11:

ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 535 மையங்களில் 7820 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் மாணவ, மாணவியர்களின் மேன்மைக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்களுக்கு பள்ளி நேரம் போலவே வீடுகளின் அருகிலேயே கூடுதல் நேரம் எடுத்து பாடங்களை கற்றுக்கொடுக்கும் இத்திட்டத்திற்கு பெற்றோர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் நடக்கும் இந்த வகுப்புகளால் மாணவர்கள் கூடுதல் கல்வித்திறன் வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக உள்ளதாக பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது கடந்த 1ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்து செயல்பட தன்னார்வலர்களாக 10 ஆயிரத்து 615 பேர் பதிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக 1250 பேர் அழைக்கப்பட்டு திறனறித்தேர்வு நடத்தப்பட்டதில் 738 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கற்றல் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆரம்ப பள்ளி அளவில் 341 மையங்களும், உயர் தொடக்க நிலை அளவில் 194 மையங்களுக்கும் என 535 மையங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் 7,820 மாணவர்கள் படித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், மாணவர்களிடையே குறிப்பாக கிராமப்புறங்களில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திட்டத்தை அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnschools.tn.gov.in