ஈரோடு ஆக 23:

உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வடிந்ததால் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கி உள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து உடைப்பு ஏற்படாத வகையில் வினாடிக்கு 1,000 கனஅடி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது. ஆனாலும் பல்வேறு இடங்களில் லேசான கசிவு ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வந்தனர்.

இந்நிலையில், பெருந்துறை அடுத்துள்ள நசியனூர் மலைப்பாளையம் கிராமத்தில் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் மதகு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு லேசான கசிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆனால் தண்ணீரின் அழுத்தம் காரணமாக நேற்று காலை திடீர் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் விளைநிலங்களில் வெளியேறியது.

இதனால் பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட கண்ணவேலம்பாளையம், வேலம்பாளையம், வரவன்காடு, மலைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளத்துார் பிரதான வீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதியில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கருக்கு மேல் நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

இதில் மஞ்சள், நெற்பயிர்கள் உள்ளிட்டவைகள் அடித்து செல்லப்பட்டன. வீடுகளில் தண்ணீர் சூழந்த 62 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் 2வது நாளாக இன்றும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு, உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பாதிக்கப்பட்ட இடங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாய்க்காலின் மேல்பகுதியில் ஆங்காங்கே மதகுகள், அவசர கால மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இன்று அதிகாலை வரை தண்ணீர் வெளியேறி வடிந்தது. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக செப்பனிடும் பணிகளை தொடங்கி உள்ளனர்.இப்பணிகள் 10 நாட்களில் முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே உடைப்பு காரணமாக விளைபயிர்கள் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு நாட்களில் சேதமதிப்பு விபரங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today