ஈரோடு சூலை 1: தேசிய டாக்டர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் இன்று டாக்டர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் நோயுடன் போராடி பொதுமக்களை மீட்டும், முன்னணி கள வீரர்களாக டாக்டர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையை வெற்றிகரமாக கடந்து வர டாக்டர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், டாக்டர்களை நன்றியோடு நினைத்து பலரும் டாக்டர்கள் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அதன்படி ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு மருத்துவமனையிலும் நேற்று தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா கேக் வெட்டினார். அனைத்து டாக்டர்களுக்கும் பூ மற்றும் கேக் வழங்கி வாழ்த்து கூறப்பட்டது. இதுபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்களுக்கும், அங்கு பணியாற்றும் செவிலியர்கள் பிற பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே