ஈரோடு அக்.18:
மனநலம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்குவேண்டும் என்று டாக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
உலக மனநல தினம் கடந்த 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்ட மனநல மருத்துவர்கள் நடத்தும் மென்டர் ஹெல்த் பவுண்டேசன் சார்பில் மனநலநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு மனநலம் சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவது என்று டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர். இதுபற்றி ஈரோடு மென்டல் ஹெல்த் பவுண்டேசன் தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது: மனநலம் என்பது உடல் நலத்துக்கு இணையானதாகும். உடல் நலனில் அக்கறை கொள்ளும் பலரும் மனநலத்தின் மீது அக்கறை காட்டுவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனநலம் பேண வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும். குழந்தைகளின் மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பது என்பதில் தொடங்கி, அவர்கள் வளர்ந்து வாலிப பருவத்தை அடையும் போதான நடத்தை வரை மனநலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.குறிப்பாக குடி போதை நோய்கள், பாலுறவு சார்ந்த கோளாறுகள், உறக்கம், உணவு சார்ந்த பிரச்சினைகள் என்று பல்வேறு காரணங்களால் மனநோய்கள் ஏற்படுகின்றன. இது மன நோய், உளவியல் பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. மனநலம் என்பது மனித வாழ்வின் அனைத்து தருணங்களிலும் உற்றுநோக்கும் தொடர்பு உடையதாகும்.
தற்போதைய சூழலில் ஒவ்வொரு தனி மனிதரும், தங்கள் மனநலம் குறித்து தெளிந்த அறிவுடன் இருக்கவேண்டும். காரணம், பலருக்கும் தங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் மனநலம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவாக உள்ளது. இந்த மனநல நாளை முன்னிட்டு பொதுமக்களுக்காக 40 வினாடி பயிற்சி ஒன்றினை செய்து பார்க்கலாம். முதலாவது ஒவ்வொருவரும் தங்கள் கண்களை மூடி, பெருமூச்சு விட்டு உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று ஆராயுங்கள். மனநிலை நன்றாக இல்லை என்றால் நீங்கள் மனம்விட்டு பேசக்கூடியவர்களின் பட்டியல் ஒன்றை தாயாரியுங்கள். அதில் ஒருவரிடம் நீங்கள் தனியாக பேச அவர்களது நேரத்தை கேளுங்கள். உங்கள் மனம் நன்றாக இருந்தால் தற்போது மனக்கவலைக்கு உள்ளாகி இருக்கும் உங்கள் சுற்றத்தினர், நண்பர்களை பட்டியல் இடுங்கள். அதில் ஒருவரை தேர்ந்து எடுத்து அவரை அழைத்து ஆறுதல் கூறுங்கள். அவர்களின் மனக்காயங்களை ஆற்றுப்படுத்துக்கள், அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். உங்கள் சமூக வலைதளங்களில் மனநலம் பற்றிய செய்திகளை பகிருங்கள். உங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாட தொடங்குங்கள். மனநல பாதிப்பால்,அதற்கு உரிய தீர்வு தேடிக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் உலகில் 40 வினாடிகளுக்கு யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். 40 வினாடிகளில் ஒரு உயிர் பிரிகிற போது, அதே 40 வினாடிகளில் ஒரு உயிரை காப்பாற்றவும் முடியும். எனவே மனநலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மனநலம் சார்ந்த நற்காரியங்களை செய்து,பிறரின் மனக்காயங்களை ஆற்றுபவர்களாக இருக்கவேண்டும்.இவ்வாறு டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறினார். https://www.tnmgrmu.ac.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/