ஈரோடு அக் 23:

ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகிய பதவிகளை தி.மு.க., கைப்பற்றியது. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., 3 வார்டுகளிலும், அ.தி.மு.க., 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் இறந்ததையடுத்து தற்செயல் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட விவேகானந்தன் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க.,வின் பலம் 4 ஆக உயர்ந்தது. அ.தி.மு.க.,வின் பலம் 2 ஆக குறைந்தது. இந்நிலையில் நேற்று தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பசீர்அகமது தலைமையில் நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற தலைவர் பதவிக்கு தி.மு.க.,வை சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் தலைவராக பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் 4வது கவுன்சிலர் விவேகானந்தன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் விவேகானந்தன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பசீர்அகமது அறிவித்தார். ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர், துணை தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் தி.மு.க., கைப்பற்றி உள்ளது. https://www.eci.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/