ஈரோடு செப் 21:

கொடுமுடி அருகே நொய்யல் ஆற்றின் கரையில் 1500 ஆண்டுகள் பழமையான வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுசாமி மற்றும் சக்தி பிரகாஷ் ஆகியோர் கொடுமுடி வட்டத்தில் நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அஞ்சூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 1500 ஆண்டுகள் பழமையான இரண்டு வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மைய இயக்குநர் ரவிக்குமார் மற்றும் தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் பூங்குன்றனார் கூறியதாவது, அஞ்சூர் கிராமம் பாண்டீஸ்வரர் மற்றும் கொற்றவை கோயிலின் பின் பகுதியில் முட்புதர்களில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்குரிய 8 மங்கல சின்னங்களில் வெண்சாமரமும் ஒன்று. இச்சிற்பங்கள் இங்குள்ள கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை கோயிலுக்கு பின்புறம் இருப்பதால் துவாரபாலகியாக இருக்கலாம். 150 சென்டி மீட்டர் உயரமும் 45 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட இச்சிற்பத்தில் உள்ள பெண், தனது இடது காலை ஊன்றி வலது காலை சிறிது மடக்கி இருபங்க தோற்றத்தில் உள்ளார். வலது கையை மடக்கி பிடித்துள்ள வெண்சாமரம் தன் வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. தன் இடது கையை ஊரு ஹஸ்த முத்திரையில் தன் தொடையின் மீது பதித்த நிலையில் இச்சிற்பம் காணப்படுகிறது. இடையில் இடைக் கச்சை ஆடைக் காணப்படுகிறது. தலையில் மகுடம் அணிந்து காணப்படும் இச்சிற்பம் சிற்பக்கலைக்கு ஒரு தனிச்சிறப்பாக திகழ்கிறது.

இதே போல இடது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பமானது 120 சென்டி மீட்டர் உயரமும், 60 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட இச்சிற்பத்தில் உள்ள பெண் தன் வலது மற்றும் இடது காலை சிறிது மடக்கி சதுர நடன அமைப்பில் உள்ளார். தன் வலது கையை மடக்கிப் பிடித்து உள்ள வெண்சாமரம் இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கையை தொடையின் மேல் வயிற்றுப்பகுதியில் ஏந்தி அர்த்தச் சந்திர முத்திரையில் உள்ளார். இச்சிற்பங்கள் சாத்விக திரு உருவ அமைப்பில் நின்ற கோலத்தில் காணப்படுகின்றன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்சாமரம் வீசும் பெண்களின் உருவம் கொங்கு மண்டலத்தில் உள்ள கலைச் சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவையாக திகழ்கின்றன.இவ்வாறு கூறினர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/