தாளவாடி சூலை 4: சத்தியமங்கலம் தாலுகா தாளவாடி யூனியனில் தலமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிக்கஹள்ளி, தடசாலட்டி, ராமரணை போன்ற அடர்ந்த வனப்பகுதிக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
மிகவும் அடர்ந்த வனப்பகுதி, மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை உட்பட பல துறை மூலம் குடிநீர், சாலை வசதி, வீடு கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் நடக்கிறது. இவற்றை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டார். மலைப்பகுதியாக இருப்பதால் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவது சிரமமாக உள்ளது. தங்கள் பகுதியில் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். தலமலை பஞ்சாயத்து சிக்கஹள்ளி மாணவியர் விடுதியில் செயல்படும் கொரோனா சிகிச்சை பணிகளை பார்வையிட்டு, கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டார். தடசாலட்டி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பு, ராமரணை பகுதியில் குடிநீர் மின் மோட்டார் அறை செயல்பாடு போன்றவைகளை ஆய்வு செய்து, கூடுதலாக தண்ணர் வழங்க யோசனை தெரிவித்தார்.
தமிழக – கர்நாடகா எல்லை பகுதியான அருள்வாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கை குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும் கேட்டறிந்தார். தாளவாடி, சூசைபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து சிகிச்சை முறை, மருந்து இருப்பு, படுக்கை வசதி ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கு தேவையான வசதிகளை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே