ஈரோடு செப் 16:

வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்) நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சுமார் 497 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திற்கான பல பயிர் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் புதிய பயிர் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் பயிர்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்களின் கருவிதை, வல்லுநர்விதை, சான்று விதை, உண்மை நிலை விதை உற்பத்தி மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஒட்டு செடி மற்றும் நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி திட்டப்பணிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி, இணை பேராசிரியர் மலர்கொடி மற்றும் உதவி பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/